யாழில் நடைபெற்ற “இராசபோசனம்” சிறுதானியப் பொங்கல் விழா!

80

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இராசபோசனம் சங்கானையில் நிகழ்ந்த சிறுதானியப் பொங்கல் விழா!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. ‘இராசபோசனம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இச்சிறுதானியப் பொங்கல் விழா இம்முறை சங்கானை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை (31.01.2026) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ‘சொல்லருவி’ ச.லலீசன் பங்கேற்றிருந்தார். கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன், ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் இ. ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான உறியடியோடு, சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இச்சிறுதானியப் பொங்கல் விழாவில் வரகு மற்றும் சாமை அரிசியில் பொங்கலிட்டுப் பரிமாறப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் முன்னர் பிரதான இடத்தைப் பெற்றிருந்த ஆரோக்கிய உணவாகவும் வரண்ட சூழலின் இயற்கைப் பயிர்களாகவும் விளங்கிய சிறுதானியங்கள் இன்று உணவுப் பயன்பாட்டில் வெகுவாக அருகி வந்துள்ளன. இதைக் கருத்திற் கொண்டே பாரம்பரிய உணவான சிறுதானிங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம்’ என்ற மகுட வாசகத்துடன் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் சிறுதானியப் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.