சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு.

190

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு–கிழக்கில் கரி நாள் பேரணி – மதத் தலைவர்கள் அழைப்பு.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4-ம் திகதியை “கரி நாள்” ஆக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கில் போராட்ட பேரணி நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கான மக்கள் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, தென்கையிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆகியோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்பின்னர் கருத்து தெரிவித்த திருகோணமலை மறை மாவட்ட ஆயர் தமிழ் மக்களின் பல்வேறு தேவைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகின்றன அல்லது பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டினார் இந்த நிலையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, தென்கையிலை ஆதீன முதல்வர் கருத்து தெரிவிக்கையில், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, தமிழ் மக்களுக்கு அது சாபக்கேடான நாளாகவே அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்க வருங்கால சந்ததியான பல்கலைக்கழக இளைஞர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கையில் வாழும் மக்களும், புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார் இந்த பூரண ஆதரவே, தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.