துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு!

175

“மக்கள் குடியிருப்புக்கு அருகே மலக்கழிவு கொட்டல்: துணுக்காய் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு”

பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக, மாங்குளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மனித கழிவு எச்சங்கள் (மலக்கழிவு) துணுக்காய் பிரதேச சபையினரால் கொட்டப்படுகின்றதாக, துணுக்காய் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

“தவிசாளர் மலக்கழிவுகள் கொட்டிய இடத்திற்கு அருகில் குடியிருக்கட்டும்; இல்லையெனில் சபை வளாகத்தில் நாங்கள் வந்து குடியிருக்கத் தயாராக உள்ளோம்” என மக்கள் ஆவேசமாகக் கூறுகின்றனர்.

 

இந்நிலையில், குறித்த கழிவகற்றல் வாகனம் கல்விளான் பகுதியில் அமைந்துள்ள முன்பிருந்த கழிவகற்றல் இடத்துக்குச் செல்ல முயன்றபோது, இன்றும் மக்கள் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் துணுக்காய் பிரதேச சபை தவிசாளரிடம் வினவியபோது,

கல்விளான் பகுதியில் நீண்டகாலமாக கழிவகற்றல் பகுதி அமைந்திருந்ததாகவும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், சிறப்பான கழிவு முகாமைத்துவத்திற்காக அந்தப் பகுதியை இடமாற்ற தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமது சபைக்கு சட்டரீதியாக கழிவுகளை அகற்றுவதற்கென இதுவரை எந்த ஒரு நிரந்தரப் பகுதியும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காட்டப்படவில்லை என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இந்தப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் தவிசாளர் நம்பிக்கை தெரிவித்தார்.