லசித் மாலிங்கா இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமனம்.

87

லசித் மாலிங்கா இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமனம்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்காவை இலங்கை தேசிய ஆடவர் அணிக்கான வேகப்பந்து வீச்சு ஆலோசகர் (Consultant – Fast Bowling Coach) ஆக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நியமனம் குறுகிய கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், 2025 டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரை ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC ஆடவர் டி20 உலகக்கிண்ணம் 2026க்கு முன்னதாக இலங்கை அணியின் தயாரிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பயிற்சி மற்றும் வளர்ச்சியில் லசித் மாலிங்கா முக்கிய பங்காற்ற உள்ளார்.
குறிப்பாக, டி20 வடிவத்தில் இறுதி ஓவர்களில் (Death Bowling) மாலிங்காவுக்குள்ள அபார அனுபவமும் திறமையும், இலங்கை அணியின் உலகக்கிண்ணத் தயாரிப்புகளில் பெரும் பலனளிக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ICC ஆடவர் டி20 உலகக்கிண்ணம் 2026 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ளதுடன், அதன் தொடக்கப் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.