மீண்டும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை! பணிகள் ஆரம்பம்..

117

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றார்.

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை முன்னெடுத்து செல்லும் நோக்கில் நேற்று புதன்கிழமை (21.01.2026) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் அடிக்கல் நடுகை நிகழ்வு நடைபெற்றது. சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியவை பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டமை உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.

நிறுவனத்தின் தலைவர் ச. நேசராஜா வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ. சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க. இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு. முரளிதரன், கண்டாவளைப் பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ. வேளமாலிகிதன், முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கூட்டுத்தாபனமாக்கப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, நாட்டின் இரசாயனத் தேவைகளைப் பூர்த்தி செய்த முக்கிய நிறுவனமாகத் திகழ்ந்தது. போர்ச் சூழ்நிலைகளால் 1985 ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் 9 மாதங்களுக்குள் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில் அரச–தனியார் கூட்டுப் பங்காண்மை (PPP) முறையின் கீழ் 30 மாதங்களில் தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகிறது.