பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்!

178

பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதை இலங்கை கணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த 37 வயதான திசாரா வெரகலகே, ஆரம்பத்தில் தனது முன்னாள் மனைவி 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்லாவைக் கொன்றதை மறுத்தார், எனினும் பின்னர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று கார்டிஃபில் உள்ள ரிவர்சைடு பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையில் நிரோதா இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை ‘அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும்’ உள்ளாக்கியது.

காலை 7.37 மணிக்கு சவுத் மோர்கன் பிளேஸ் பகுதியில் உள்ள சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவியாளர்கள் விரைந்தனர், ஆனால் நிரோதாவைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணம் தொடர்பாக வெரகலகே சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டபோதும் ஆனால் அவர் கொலையை மறுத்தார். இருப்பினும், கொலை நடந்த அன்று கத்தி வைத்திருந்ததை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

திங்கட்கிழமை (13) நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வெரகலகேவுக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 20 அன்று தண்டனை வழங்கப்படும் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நிரோதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒரு அஞ்சலிச் செய்தியை வெளியிட்டனர். அதில் அவரை ‘அன்புக்குரிய மகள், குடும்ப உறுப்பினர் மற்றும் பலரின் பிரியமான தோழி’ என்று வர்ணித்திருந்தனர்.

அதேவேளை முன்னதாக பொன்டிப்ரிட்டில் நடந்த ஒரு மரண விசாரணை, நிரோதா இரண்டு கார்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க காயங்களுடன் காணப்பட்டதாகவும், ஒரு நண்பரால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவந்தது.

நோயியல் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் லீட்பீட்டர், பல கூர்மையான ஆயுதக் காயங்களே தற்காலிக மரணக் காரணம் என்று தெரிவித்தார்.

அதேசமயம் பிராந்திய மரண விசாரணை அதிகாரி பாட்ரிசியா மோர்கன், அவரது மரணம் ‘வன்முறை அல்லது இயற்கைக்கு மாறானதாக’ இருக்கலாம் என்று சந்தேகிக்க காரணம் இருப்பதாகக் கூறினார்.