சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனைச் சந்தித்த இலங்கைத் தூதுவர்.!!

40

சவுதி அரேபியாவின் டம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை, சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் ஒக்டோபர் 26ஆம் திகதி சந்தித்துள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அனோஜனுடன் கலந்துரையாடிய தூதுவர், அவருக்குக் கிடைக்கக்கூடிய தூதரக மற்றும் சட்ட உதவிகள் குறித்து விளக்கியுள்ளார். வழக்கறிஞருடனும் தூதரகத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்த தூதுவர், அனோஜனின் நலனைக் கவனிப்பதில் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள போதிலும், வழக்கு முடிவடைந்துவிட்டதாகக் கருத முடியாது; அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணையின் முடிவே அவரது சட்ட நிலையைத் தீர்மானிக்கும்.