பூனையை காப்பாற்றுவதற்காக உயிரிழந்த இளம் பெண்.!!

66

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த தனது பூனையை மீட்க முயற்சித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரவில் தனது தந்தையுடன் இணைந்து பூனையை வெளியே எடுப்பதற்காக கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது விபரீத நிலைக்கு முகம் கொடுத்துள்ளார்.

உயிரிழந்தவர் வறக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கே. பி. தினேத்ரி இமேஷிகா உதானி என்ற திருமணமாகாத பெண்ணாவார்.

அவர் தனது தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததுடன், நிட்டம்புவ களகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிப்பு நிறுவனமொன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பூனை கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டவுடன் தனது தந்தையுடனும் கிணற்றிற்கு சென்றுள்ளார்.

கிணறு தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும், அவர் தனது கைத்தொலைபேசியின் டோர்ச் லைட்டை ஒளிரவிட்டு கிணற்றின் உட்பகுதியைப் பரிசோதித்துள்ளார்.

கிணற்றில் விழுந்து கிடந்த பூனையைக் கண்ட தந்தையும் தினேத்ரியும், அதை வெளியே எடுப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய, டோர்ச் லைட்டை பிடித்திருந்த பெண் திடீரென கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூனையை காப்பாற்றுவதற்காக உயிரிழந்த இளம் பெண் - இலங்கையில் சம்பவித்த பெரும் சோகம் | Young Women Dies While Saving Her Cat

கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை உறவினர்கள் உடனடியாக வெளியே எடுத்து நிட்டம்புவ வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கிணற்றுக்குள் விழும் போது கொங்கிரீட் பகுதியில் தலை பலமாக மோதியதால் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.