நல்லூரில் நள்ளிரவு கோர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!

61

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 23: நல்லூர் குறுக்குத் தெரு சந்திப்பில் நேற்று (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தசாமி கோகுலதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த சஞ்சீவன் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார் முன்பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளமை காணப்படுகிறது.

மேலும், சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் பொலிஸ் அல்லது மருத்துவ பரிசோதனை மூலம் கிடைக்க வேண்டியுள்ளது.