வவுனியா – கிளிநொச்சி பயணிகளோடு சிவனொளிபாதமலை சென்ற வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து.!!

26

சிவனொளிபாத மலைக்கு பயணித்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற கார், நல்லத்தண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று(19.08.2026) பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப்பயணிகளே சிக்கியுள்ளனர்.

எனினும் குறித்த விபத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த குழுவினர், நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் நல்லத்தண்ணி காவல் நிலையத்திற்கு சென்று , சிவனொளிபாத மலைக்கு செல்லும் தங்கள் நோக்கத்தைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இரவில் பயணம் செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அந்தக் குழுவினருக்கு அறிவுறுத்தி, காலையில் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்தக் குழுவினர் தங்குவதற்கான இடத்தைத் தேடித் தங்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவுவில் மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு அருகே அந்த வாகனம் சாலையிலிருந்து விலகி கால்வாயில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வாகனத்தில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வாகனம் பெருமளவில் சேதமடைந்தபோதிலும், அதில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நல்லதண்ணிய காவல்துறையினர் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.