கிழக்கில் ஐவர் படுகொலை: பிள்ளையானுக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!

127

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ரி-56 ரக துப்பாக்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த-15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மேற்படி வழக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (30.06.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசதுரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரகாந்தனை ஜூலை-13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.