புதைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்பு!

181

வாகரையில் புதைக்கப்பட்டிருந்த பு*லிகளின் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.

 

மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் கடந்த யுத்த காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பெருமளவான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் விவசாய பணிகளுக்காக குழி தோண்டிய நபரொருவருக்கு மண்ணுக்குள் மர்மப் பொருட்கள் தென்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அங்கு வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், பலத்த மழையையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மீட்பு நடவடிக்கைகளின் போது, 38 ஆர்.பி.ஜி. குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் 5 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜீவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் சி. கஜேந்திரன் மற்றும் வாகரை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகியோரின் முன்னிலையில் இம்மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மிகவும் நுட்பமான முறையில், பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்த இவ்வெடிபொருட்கள், கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப்பு*லிகளின் மருத்துவ முகாமுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.