தன் உயிரைக் கொடுத்து 4 வயது மகனைக் காப்பாற்றிய வீரத்தாய்!

83

மாத்தறை மாவட்டத்தின் மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், தனது 4 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுடைய ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த சதுரங்கி என்ற இளம் தாய், தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின்படி, வீதியின் வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த நீர்ப்பாசனக் கால்வாயில் கவிழ்ந்துள்ளது. கால்வாயில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததால் தாயும் மகனும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் தனது உயிரைப் பொருட்படுத்தாமல், 4 வயது மகனை மோட்டார் சைக்கிளின் உயரமான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. விபத்துச் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், மோட்டார் சைக்கிளின் மேல் இருந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

எனினும், தண்ணீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சதுரங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தாயின் தியாகமும் அன்பும் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உயிர் தப்பிய சிறுவன் மேலதிக பராமரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.