தாமதிக்கப்பட்ட நீதி வேதனையானது! சுரேஸ் சாலேயின் மனைவி கத்தோலிக்க ஆயர்களுக்கு கடிதம்.!

82

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பேராயர் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன் மூலம், நீதியின் கோட்பாடுகளின் அடிப்படையில் தனக்கு ஆதரவளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி என்ற ரீதியில் நான் மிகுந்த மரியாதையுடனும் பணிவுடனும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

எந்தவொரு நீதிமன்றமும் எனது கணவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்மானிப்பதற்கு முன்பே, அவரது நற்பெயரும், கௌரவமும், கண்ணியமும் பகிரங்கமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

எங்களது குடும்பம் நிர்க்கதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வாறானதொரு தருணத்தில், அவர் அனுபவிக்கும் கடுமையான உடல், மன மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகளுக்கு மத்தியில் உங்களது தலையீட்டை நான் பிரார்த்திக்கிறேன்.

எனது கணவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இலங்கையில் மிக உயர்ந்த மதிப்பீட்டைப் பெற்ற ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஆவார். 35 வருடங்களுக்கும் மேலான அவரது சிறந்த இராணுவ சேவையில், தேசத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சேவையைப் பாராட்டி வீரத்தன்மை, போர்க்களம் மற்றும் நீண்டகால சேவைப் பதக்கங்கள் பல அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவரது தொழில்முறை வாழ்க்கைக் காலம் முழுவதும், குறிப்பாக அவர் சிரேஷ்ட பதவிகளை வகித்த காலகட்டங்களில், அவர் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தனிநபருக்கும் அன்றி, நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் மாறாத விசுவாசத்தைக் காட்டி, அரசியல் சார்பின்றி இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் நம்பிக்கையுடன் பணியாற்றினார்.

அவர் தனது வாழ்க்கையை முழுமையாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்பிற்காகவே அர்ப்பணித்தார்.

அவரது சேவைக்காலத்தில் எந்தவொரு நாளிலும் அவர் ஒழுக்கீனமான செயல்களுக்காகக் குற்றவாளியாகக் காணப்படவோ அல்லது எந்தவொரு குற்றச்செயலுக்காகவோ தண்டிக்கப்படவோ இல்லை.

இருப்பினும், இன்று அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதுவும் தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் சந்தேக நபர் என்ற அடிப்படையில் மட்டுமேயாகும். அவர் எந்தவொரு குற்றத்திற்கும் குற்றவாளியாக்கப்படவில்லை என்பதுடன், எந்தவொரு நீதிமன்றமும் அவரை குற்றவாளி என அறிவிக்கவில்லை.

நீதிமன்ற செயல்முறைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அடிப்படை யதார்த்தத்தை நிராகரித்து, பலரது மனங்களில் அவர் ஏற்கனவே குற்றவாளியாக்கப்பட்டு விட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் என்ற கோட்பாடு வெறும் சட்டக் கோட்பாடு மட்டுமல்ல.

துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கோட்பாடு தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, எனது கணவருக்கு பகிரங்கமாகத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

மதிப்பிற்குரிய ஆயர்களே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகப் பல வருடங்களாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட பல்வேறு விசாரணைகளில், எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

இந்த விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், அவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பும் இல்லாத நிலையிலும், இன்று அவர் நமது நாட்டின் வரலாற்றில் நடந்த மிக இருண்ட பேரழிவின் முதன்மைத் திட்டமிட்டாளர் அல்லது “சூத்திரதாரி” எனப் பகிரங்கமாகச் சித்தரிக்கப்படுகிறார்.

இதனால் எங்களது குடும்பம் அனுபவிக்கும் துன்பங்கள் அளவிட முடியாதவை. அருட்தந்தை ஜூட் ரொஹான் சில்வா மற்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ ஆகியோரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் எனது கணவருக்கு எதிரான தற்போதைய பொது மக்கள் விம்பம் குறித்த எங்களது ஆழ்ந்த கவலையை மிகுந்த மனவருத்தத்துடன் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நீண்ட காலமாக இந்த அருட்தந்தையர்கள் பகிரங்கமாகச் செய்யும் அறிக்கைகள் மூலம், நீதிமன்ற செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியிலும், எந்தவொரு நீதிமன்றமும் அவரை குற்றவாளியாக்காத நிலையிலும், எனது கணவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் “சூத்திரதாரி” என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

இந்த விசாரணை செயல்முறையின் சாட்சிகளாக இருக்கும் மற்றும் அதன் காரணமாகவே விசாரணைக்கு உட்படுத்தப்படும் விடயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள நபர்களிடமிருந்தே இவ்வாறான பொதுக் கருத்துக்கள் வெளியாவது விசேடமாக வருத்தத்திற்குரிய விடயமாகும்.

உயிர்த்த ஞாயிறு பேரழிவு தொடர்பாகத் தங்களது சொந்த நடத்தைகள் குறித்தே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள அதிகாரிகள், அதே சம்பவங்களிலிருந்து எழும் ஒரு விசாரணையை வழிநடத்துவது, கண்காணிப்பது அல்லது அதற்குப் செல்வாக்குச் செலுத்துவது அத்தியந்தம் கவலைக்குரியதாகும்.

இதைவிடவும் மனதை வதைக்கும் விடயம் என்னவென்றால், எனது கணவர் அரசாங்கத்தின் காவலில் இருக்கும் போது அவருக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விதமாகும். அவர் சித்திரவதைகளுக்கும் மற்றும் ஏனைய கொடூரமான, அமானுஷ்ய மற்றும் அவமதிப்பான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழுவின் மனநல மருத்துவர்களால், சித்திரவதைகள் மற்றும் அநாகரிகமான நடத்தைகளுக்கு அமையக்கூடிய கடுமையான மன உளைச்சல்கள் அவரிடம் கண்டறியப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் எனது கணவரைக் குற்றவாளி எனத் தீர்மானித்தால், அந்தத் தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொள்வோம்.

இருப்பினும், நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீர்மானித்தால் கூட, தொடர்ச்சியாக இடம்பெற்ற பொது மக்கள் மத்தியிலான கண்டனங்கள் காரணமாக இழந்த பல வருட அவமானம், அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், அவரது மனைவி, பிள்ளைகள், வயோதிப தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட உணர்வு ரீதியான மன உளைச்சல்கள் அல்லது ஏற்கனவே அவரிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை எந்தவொரு தீர்ப்பினாலும் மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாது. தாமதிக்கப்பட்ட நீதி வேதனையானது.

எங்களது குடும்பம் ஆழமான கத்தோலிக்கப் பின்னணியைக் கொண்டது. எனது கணவரின் அன்பான தாய், தனது வாழ்நாள் முழுவதும் திருச்சபையின் போதனைகளின்படி விசுவாசமாக வாழ்ந்த ஒரு தெய்வபக்தி மிக்க கத்தோலிக்கப் பெண்மணியாவார். அவர் தனது பிள்ளைகளை நேர்மை, கருணை, பணிவு, மன்னிப்பு மற்றும் பிறன்பு போன்ற கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையிலேயே வளர்த்தெடுத்தார்.

எனவே, நாங்கள் திருச்சபையை குரோதத்துடன் பார்க்கவில்லை, மாறாக நம்பிக்கையுடனேயே பார்க்கிறோம். கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் மனச்சாட்சியின் குரலாகவும், நீதியின் பாதுகாவலனாகவும், மனித கண்ணியத்தின் காவலராகவும் விளங்கி வந்துள்ளது.

நீதிமன்ற செயல்முறைகள் நிறைவடைவதற்கு முன்னரே எனது கணவரை முதன்மைத் திட்டமிட்டாளராக அடையாளம் காட்டித் தொடர்ச்சியாகச் செய்யப்படும் பகிரங்கப் பிரகடனங்கள், நீதி, உண்மை, அர்ப்பணிப்பு, கருணை மற்றும் நிரபராதியாகக் கருதும் கோட்பாடு ஆகியவற்றின் மீதான திருச்சபையின் மாறாத அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகின்றதா என்பது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களாகிய உங்களிடம் நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரியுள்ளார்.