இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானம் அசாமில் விபத்து; 5 வீரர்கள் உயிரிழப்பு.!!

35

 

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் [13.06.2026] காலை விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் காலை சுமார் 10 மணியளவில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த போக்குவரத்து விமானம் தனது வழக்கமான பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், தரையிறங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதையடுத்து, இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகளும் ஆரம்பகட்ட விசாரணைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை யாரும் ஊகங்களையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறா அல்லது வானிலை காரணமா என்பது தொடர்பான விவரங்கள், முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான பின்னரே தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் இந்திய ராணுவ வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த 5 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.