கொடூரமான முறையில் நடத்தப்படும் சுரேஷ் சாலே – CIDக்கு வந்த மனைவி கண்ணீருடன் வெளியிட்ட தகவல்.

107

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப்பிரிவுத்தலைவர் சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவை பார்ப்பதற்காக இன்று (07) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் கூறிய போதிலும், அவர் அதனை ஏற்கத்தயாராக இல்லை எனவும், தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போதும் ஒரு சந்தேகநபர் மட்டுமேயான சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்தவொரு நீதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது கணவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிலும் இது மிகவும் மனிதாபிமானமற்ற நடத்தை என்று கூறப்பட்டுள்ளது. அவர் இப்போது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். எந்த வகையிலும் அதனை நிறுத்த அவர் விரும்பவில்லை. நாங்கள் அவரது மனதை மாற்ற முயற்சித்தும் பயனில்லை. புலனாய்வுகளை மேற்கொள்ளும் போது அதனை மனிதாபிமான முறையில் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் மிகவும் கொடூரமான முறையில் தான் நடத்தப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, வைத்தியசாலைக்காவது அவரைக் கொண்டு செல்ல முடிந்தால் பெரிய விடயமாக இருக்கும் என்றும், பொறுப்பு வாய்ந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.