குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

102

குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (06.01.2026) அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் 43 வயது நபரும், அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தீ வைக்கப்பட்ட வேளையில் வீட்டில் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அறிந்து உடனடியாக வீட்டிற்கு வந்த 20 வயது மகன், தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் அடிக்கடி மதுபோதையில் மனைவியை தாக்கி வந்ததாகவும், இதனால் குடும்பத்திற்குள் தொடர்ச்சியான தகராறுகள் ஏற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸாரிடம் முன்னதாக பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிந்துனுவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.