வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை.!!

69

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கைதி, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதி, கொழும்பு சிறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மற்றும் தீவுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குறித்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்திருந்தது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்றபோதும், மரண தண்டனைத் தீர்ப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. இறுதித் தீர்ப்பை வாசித்துக் காட்டும் நடவடிக்கைக்காகவே கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை சிறைக்குள் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் பாதுகாப்பு கொண்ட யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இந்த தற்கொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வித்தியா கொலை வழக்கு மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.