கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய இலங்கையில் 12 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள்.!!

43

இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கிய இடம் வகிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கர்ப்பப்பை வாய் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு முந்தைய செல்களை துல்லியமாக கண்டறியக்கூடிய 12 அதிநவீன கோல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்கள் அரச மருத்துவமனைகளில் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 72 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தில் மேலும் 42 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 114 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அநுராதபுரம், யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 6 இயந்திரங்களும் அடுத்த மாதத்திற்குள் ஏனைய மாவட்ட மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது பிரதேச மருத்துவ அதிகாரி (MOH) கிளினிக்குகள் மூலம் Pap Smear பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளை, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பெண்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் உயிரிழப்புகளை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.