தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் கைது.!!

71

மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 28 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பல மாதங்களாக இந்த கொள்ளைகள் இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாண தென் பகுதி குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகள், 17 கிராம் 800 மில்லி கிராம் “ஐஸ்” போதைப்பொருள் மற்றும் கொள்ளைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன்பாஸ் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இடம்பெற்ற சங்கிலி அறுக்கும் சம்பவங்களுடனும் இவருக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இவர் “ஐஸ்” போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் கொள்ளைச் சம்பவங்களுடனும் இவருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை, பெண்கள் தனியாகச் செல்லும் போது அதிக அவதானத்துடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.