செம்மணி புதைகுழி அகழ்வு: 259 எலும்புக்கூடுகள் அடையாளம் – கைக்குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு!

84

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள், யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் பத்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தன.

இதுவரை இப்புதைகுழியில் மொத்தம் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 254 எலும்பு எச்சங்கள் முறையாகத் துப்புரவாக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தற்போது அகழ்ந்தெடுக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலானவை சிறுவர்களுடைய என்புத் தொகுதிகளாக இனம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, நேற்றைய தினம் இரண்டு கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலும்புக்கூடுகளுடன் சேர்த்து பால் போத்தல்கள், பொம்மைகள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட 14 பொருட்கள் நேற்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் தலைமையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வடமேற்குப் பகுதியில் மேலும் சில என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், இப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மன்னார் சதொச மனிதப் புதைகுழிக்கு அடுத்தபடியாக, இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் செம்மணியில், கடந்த 2025 மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.