நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

116

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து, சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை, ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பெருமளவு பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர்களைப் பின்தொடர்ந்தனர்.

இதன்போது குறிகட்டுவான் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவு பகுதியில் வைத்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 21 இலட்சம் ரூபாய் பணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16, 17 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.