களு கங்கை பாலத்தில் விபத்து: 9 பேர் நூலிழையில் உயிர்தப்பினர்.!!

96

இன்று அதிகாலை இரத்தினபுரி களு கங்கை பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிற்றூர்தியில் பயணித்த 9 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கஹவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், வாகனம் பாலத்தின் விளிம்பிலேயே நின்றதால் ஆற்றில் விழாமல் தப்பியுள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பெரிய உயிர் ஆபத்திலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்களின் படி, அதிக வேகம் அல்லது சாரதியின் சோர்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரவு நேர பயணங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.