அமோக வெற்றிக்கு மக்கள் தான் காரணம் – சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவிப்பு.!

108

“மக்களின் தாயன்பே நம்மை உயர்த்தியது; பணநாயக அரசியலை மக்கள் தோற்கடித்துள்ளனர்”

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற குழுத் தலைவர் திரு சி. ஜோசப் விஜய், அண்மைய தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கிய நாளிலிருந்து விமர்சனங்களும் அவதூறுகளும் எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எவரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் தைரியமாக நின்றோம் என தெரிவித்துள்ளார்.

“நடுநிலை மற்றும் விமர்சனம் என்ற பெயரில் பல்வேறு தாக்குதல்கள் நடந்தபோதிலும், தமிழக மக்கள் எப்போதும் தாயன்போடு நம்மை ஆதரித்து வந்தனர். அதே அன்பு இந்தத் தேர்தலிலும் பெரும் வாக்குகளாக மாறியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் இந்திய அரசியலையே அதிர வைத்த ஒரு அதிசயத் தேர்தல் எனக் குறிப்பிட்ட அவர், குடும்பங்களின் ஆதரவும் குறிப்பாக இளம் தலைமுறையின் ஈடுபாடும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி மட்டுமல்ல, தமிழக மக்களின் மனங்களில் வளர்ந்த ஜனநாயகத்தின் வெற்றி என்றும் அவர் வலியுறுத்தினார். பணநாயக அரசியல் முறையை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் மாற்றத்திற்கான முக்கிய அரசியல் சக்தி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த வெற்றிக்காக மக்களுக்குத் தனது வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் ‘Virtual Warriors’ எனப்படும் ஆதரவாளர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் அதிக ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது அன்பை தெரிவித்துள்ளார்.