சினிமா பாணியில் காட்டுக்குள்ளே கசிப்பு… குளத்துக்கு அடியில் தேக்கு மரங்கள் கடத்தல்.!!

77

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் (02.05.2026) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பொலிஸார் வருவதை உணர்ந்து காட்டுக்குள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சோதனையின் போது, மூன்று பெரிய பீப்பாய்களில் சுமார் 540,000 மில்லி லீற்றர் அளவிலான கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குளத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மரக்குற்றிகள் மற்றும் மரக்கம்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோத மதுபான உற்பத்தியுடன் சேர்த்து மரக்கடத்தலும் இடம்பெற்றிருந்ததை உறுதிப்படுத்துகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.