ஹட்டனில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் – சிலர் கவலைக்கிடம்.!!

129

இன்று (29.04.2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் அருகிலுள்ள டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ், பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றொரு பேருந்திற்கு இடம் வழங்க முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பல குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் விழிப்புணர்வு தேவை என வலியுறுத்தப்படுகிறது.