2026ல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 7 இலட்சம் தாண்டியது.!

149

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மார்ச் 25, 2026 வரை மொத்தம் 708,348 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 139,164 பேர் வருகை தந்துள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 74,295 பேரும், ரஷ்யாவிலிருந்து 63,505 பேரும் வந்துள்ளனர். மேலும், மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 151,693 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் 39,424 பேர் (26%) இந்தியர்கள் ஆகும். இதனுடன், ஐக்கிய இராச்சியம் (13,967), ரஷ்யா (13,272), சீனா (12,166) மற்றும் ஜெர்மனி (10,523) ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான வருகைகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததை ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் சுற்றுலா துறை வளர்ச்சி தொடர்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.