1990 குருக்கள்மட படுகொலை: அகழ்வுப் பணி மீண்டும் தொடக்கம்!

108

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் குருக்கள்மடத்தில் இடைமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் ஒரு பகுதியாக அகழ்வுப் பணி நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த அகழ்வுப் பணியில் சட்டத்தரணிகள், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை, தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இந்நடவடிக்கையை நேரில் பார்வையிட்டனர்.

இந்த அகழ்வுப் பணியின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூர சம்பவத்தின் உண்மை நிலை குறித்து முக்கிய ஆதாரங்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன; இந்த விசாரணைகள் வரலாற்று மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.