19ஆவது ஐபிஎல் இன்று தொடக்கம்: இந்தியா மீது திரும்பும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம்.

78

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) 19ஆவது அத்தியாயம் இன்று சனிக்கிழமை (28) பெங்களூருவில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகிறது. நடப்பு சம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் தொடக்கப்போட்டி உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் இந்த தொடர் ‘மினி உலகக் கிண்ணம்’ எனக் கருதப்படுகிறது.

இந்த தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கிண்ணத்திற்காக போட்டியிடுகின்றன. உலகின் முன்னணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அணித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், வீரர் மாற்றங்கள், புதிய விதிமுறைகள் மற்றும் அணிகளின் உரிமையாளர் மாற்றங்கள் முக்கிய கவனத்தை பெற்றுள்ளன. ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு செம்சன் அணிமாற்றம், புதிய ரசிகர் பூங்காக்கள் அமைப்பு, மேலும் இலங்கை வீரர்களின் பங்கேற்பு ஆகியவை இந்த ஆண்டின் சிறப்பம்சங்களாகும்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகுந்த போட்டியையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சம்பியன் பெங்களூரு பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்க, சென்னை மற்றும் மும்பை அணிகள் ஆறாவது கிண்ணத்தை நோக்கி களமிறங்குகின்றன. இதுவரை கிண்ணம் வெல்லாத அணிகளும் முதல் வெற்றியை நோக்கி போராட உள்ளதால், எதிர்கால போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கணிக்கின்றன.