கிளிநொச்சியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: அண்டை வீட்டுக்காரர் கைது.!!

102

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் மாயவனூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளான பெற்றோருடன் வாழ்ந்து வந்த குறித்த சிறுமி, அண்டை வீட்டில் வசித்த நபரால் நீண்டகாலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், சில தரப்பினர் இந்த விவகாரத்தை சமரசம் செய்து மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து மீண்டும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக விசேட தேவையுடைய குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும், குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை மறைக்க முயற்சிப்பவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.