டிவி வாங்க வந்த இடத்தில் 13 லட்சம் அவுட்! ஆக்ரோஷமாக இறங்கிய 6 பெண்கள்.!

79

தெஹிவளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 6 பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு தொடர்புடையதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சாதாரண வாடிக்கையாளர்களைப் போல கடைக்குள் நுழைந்து தொலைக்காட்சி வாங்குவது தொடர்பாக உரையாடியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆயுதங்கள் மற்றும் இரும்புத் தடிகளுடன் மீண்டும் குழுவாக வந்து கடை ஊழியர்களை தாக்கியுள்ளனர். அதன்பின்னர் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பெண்கள் உட்பட பெரிய குழுவொன்று இவ்வாறு திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.