120 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 12 வயது சிறுவன் வீரத்தால் தப்பிய குடும்பம்.!!

94

கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன், கடந்த (02) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயலால் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக தவலந்தென்ன நோக்கி பயணித்த வேன், ரம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 120 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மற்றொருவர் அருகில் தூக்கி வீசப்பட்டிருந்தார்.

கடுமையான காயங்களுக்கிடையிலும் மன உறுதியுடன் இருந்த ஹிரந்த, மற்றொருவருடன் இணைந்து மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிக் கொண்டு கடும் சிரமத்துடன் பள்ளத்திலிருந்து மேலே வீதிக்கு ஏறி வந்தார்.

பின்னர், வழியாக சென்ற வாகனங்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து, இறுதியில் ஒரு லொறி ஊழியர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் முதலில் கொத்மலை வைத்தியசாலைக்கும் பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டனர்.

தமது உயிரைப் பொருட்படுத்தாது துரிதமாக செயல்பட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவன் ஹிரந்தவின் வீரத்தை பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளான்.