தேசிய பாடசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து சம்பவம்: 5 மாணவர்கள் காயம்.!!

114

அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13.05.2026) காலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் விஞ்ஞானப் பிரிவு மாணவர் ஒருவருக்கும் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கும் இடையே நீண்டநாளாக இருந்து வந்த முரண்பாடு இந்த தாக்குதலுக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது குறித்த மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருவரைத் தாக்க முயன்றபோது தடுக்க வந்த ஏனைய மாணவர்களும் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்த எப்பாவல பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தாக்குதல் நடத்திய மாணவரை கத்தியுடன் கைது செய்துள்ளனர். காயமடைந்த 5 மாணவர்களும் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குள் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு, பாடசாலைகளில் ஒழுக்கம் மற்றும் மனநல ஆதரவு தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.