ஹிஷாலினி மரணம்: மே 5க்கு தீர்மானிக்கும் விசாரணை – நீதி கிடைக்குமா?

158

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: மேலதிக சாட்சிய விசாரணை மே 5க்கு ஒத்திவைப்பு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்த சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இரண்டாவது சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தனர். இதையடுத்து, மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நான்காவது மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீன் மற்றும் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் முன்பே அறிவித்து, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய ஜூட் குமார் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி, 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 12 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், 2021 ஜூலை மாதம் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கோரி நாடு முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்ததாவது, சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக உறுதிப்படுத்தும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில், அவரது மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு மீதான நீதிமன்ற விசாரணைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் தொடர்கிறது.