வீடமைப்பு மோசடி குற்றச்சாட்டு: கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஆணைக்குழு விசாரணை

94

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் செவ்வாய்க்கிழமை (17) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி அவர் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஆணைக்குழுவில் முற்பகல் ஆஜராகி விசாரணைக்கு முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணை சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றதாகவும், அதன்போது கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பின்னர் அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சும் நகர அபிவிருத்தி அமைச்சும் செயலாளராக இருந்த காலத்தில், கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் வீடுகள் பகிர்ந்தளிக்கும் செயல்முறையில் ஏற்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதும் கவனிக்கத்தக்க விடயமாக உள்ளது.