வில்பத்து பூங்காவில் உடும்பு வேட்டை: துப்பாக்கியுடன் 61 வயது நபர் கைது.!

262

வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் 61 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி அம்பகஹவெவ பகுதியில் இடம்பெற்றது.

விசாரணைகளின்படி, குறித்த நபர் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 4 அடி நீளமான உயிரிழந்த உடும்பு மற்றும் ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையை வனவிலங்கு உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் இணைந்து முன்னெடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.