வாயு தொல்லை என்று கவனிக்காமல் இருக்காதீர்கள்! கல்லீரல் புற்றுநோயின் 5 அபாய அறிகுறிகள்.

216

நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இது வயிற்றின் மேல் வலது பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது. மேலும் இந்த கல்லீரல் கீழ் வலது விலா எலும்புக் கூடு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கல்லீரல் இரத்தத்தை சுத்திகரிப்பது, நச்சுக்களை அகற்றுவது, செரிமானத்தை பராமரிப்பது, உடலுக்கு ஆற்றலை வழங்குவது போன்ற பல முக்கியமாக பணிகளை செய்கிறது.

இவ்வாறு பல அத்தியாவசிய வேலைகளை செய்யும் கல்லீரலில் பல பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் உள்ளது. குறிப்பாக கல்லீரலில் புற்றுநோய் வருவது மிகவும் ஆபத்தானது. நிபுணர்களின் கூற்றுப்படி, கல்லீரல் புற்றுநோயின் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவென்றால், அதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் தெளிவாக தெரியாது. இதனால் ஆரம்பத்திலேயே இந்த வகை புற்றுநோயை கண்டுபிடிக்க பலரும் தவறுகின்றனர்.

ஏனெனில் இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகளானது தினசரி சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளைப் போன்று இருக்கும். இதன் விளைவாக இதை பலரும் சாதாரணமாக கருதி விட்டுவிடுகிறார்கள். ஒருவேளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். இப்போது கல்லீரல் புற்றுநோய் இருந்தால் உடலில் தெரியும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து காண்போம்

1. வலது பக்க வயிற்றில் வலி
கல்லீரல் நமது உடலின் வலது பக்கத்தில் உள்ளது. எனவே இந்த கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது வயிற்றுப் பகுதியில் வலி, உப்புசம் அல்லது இழுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ந்து வலியை சந்தித்தால் அல்லது அந்த வலி மோசமடைந்தால், அது கல்லீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகளை நிறைய பேர் வாயு தொல்லையாக இருக்கும் என்று அசால்ட்டாக நினைத்து புறக்கணிக்கிறார்கள். எனவே இப்படியான அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

2. எடை இழப்பு
எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை குறைகிறதா? அதாவது, டயட் அல்லது உடற்பயிற்சி என்று எதையும் மேற்கொள்ளாமல், உடல் எடை வேகமாக குறைகிறதா? அப்படியானால் கல்லீரல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. உடலில் புற்றுநோய் கட்டி இருந்தால், அது உடலின் ஆற்றலை விரைவாக குறைத்து, எந்த முயற்சியும் இல்லாமல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

3. பசியின்மை
உங்களுக்கு பசி எடுப்பதில்லையா? அல்லது சிறிதளவு உட்கொண்டாலே வயிறு நிரம்பிய உணர்வை சந்திக்கிறீர்களா? கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால், அது செரிமான செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக ஒரு சிறிய அளவு உணவை சாப்பிட்ட பிறகும் பசியின்மை மற்றும் முழுமையான உணர்வுக்கு வழிவகுக்கிறது. அதுவும் இப்படியான பிரச்சனை கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்றாகும்.

4. கண்கள் மற்றும் தோல் நிற மாற்றம்
கல்லீரலில் பிரச்சனை இருந்தால் அல்லது கல்லீரல் சேதமடைந்திருந்தால், அது பிலிரூபின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறும். மஞ்சள் காமாலை திடீரென ஏற்பட்டு நீண்ட நேரம் நீடித்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது கல்லீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றாகும்.

5. உடல் சோர்வு உடலில் கல்லீரல் சரியாக செயல்படாவிட்டால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடல் மிகுந்த உடல் சோர்வு, பலவீனம் மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். எனவே நன்கு ஓய்வை எடுத்த பின்னரும் உடல் சோர்வை சந்தித்தால், அது கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.