வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை: 24 வயது இளைஞன் கைது.!!

102

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22.05.2026) இடம்பெற்ற வாகன விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கெப் ரக வாகனம் மோதி படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இது சாதாரண விபத்து அல்ல என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் மரணம் சந்தேகத்திற்குரியது என வாக்குமூலம் வழங்கியதையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் பின்னர், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கெப் வாகனத்தின் 24 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு அவர் தப்பிச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தனிப்பட்ட முரண்பாடே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.