வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலம்!

194

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை  மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி சத்தியதேவி நந்தசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்கள் கௌரவமாக வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, வீரர்களின் சத்தியப்பிரமாணத்துடன் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தர்மலிங்கம் முகுந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. வி. விமலன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஆசிரியர் ஆலோசகர்களான (உடற்கல்வி) திரு. கி. யூட்பிரதமாறன் மற்றும் திரு. வி. விஷ்ணு ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 14, 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவினருக்கான 200 மீட்டர் மற்றும் 4 x 100 மீட்டர் அஞ்சலோட்டம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளின் நிறைவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் இல்லங்களுக்கும் விருந்தினர்களால் பதக்கங்களும் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதிபர் மற்றும் விருந்தினர்களின் உரையினைத் தொடர்ந்து, நன்றியுரை கூறப்பட்டு, தேசியக் கொடி இறக்கப்பட்டு பாடசாலைக் கீதத்துடன் விளையாட்டுப் விழா இனிதே நிறைவுற்றது.

பெற்றோர்கள், பழைய மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.