வவுனியா ஏ-9 வீதியில் கோர விபத்து: முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் பலி.!

13

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் நேற்று (02) இரவு ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் ஒன்றின் மீது பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகனான அத்புதராஜா தர்சன் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்குக் காரணமான வாகனம் மற்றும் அதன் சாரதி தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, இரவு நேரங்களில் பாதசாரிகள் மற்றும் சாரதிகள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதன் மூலம் இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.