வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்: தென்னை, வாழை பயிர்கள் பெரும் சேதம்.!

167

வவுனியா மரக்காரம்பளை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பெருமளவு பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது, 18க்கும் மேற்பட்ட தென்னை பயிர்களும், 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களும் யானைகளால் நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு யானைத் தொல்லை காணப்படாத நகரின் எல்லைப் பகுதியில் அமைந்த இந்த கிராமத்தில் திடீரென ஏற்பட்ட இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், கிராமத்தைச் சுற்றி யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.