வடக்கு மாவட்டங்களில் கனமழை: 10,311 பேர் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு.!!

54

செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 26 வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த வெள்ளம், கனமழை, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 10,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்; ஒருவர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய அனர்த்த நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களிலுள்ள 206 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் 28 வீடுகள் முழுமையாகவும் 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், சில சிறு வணிக நிறுவனங்களுக்கும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காலநிலை அவதானிப்புப் பதிவுகளின்படி, அக்டோபர் 25 காலை முதல் 26ஆம் திகதி அதிகாலை வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் 163 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. மன்னாரின் இலுப்பைக்கடவையில் 148 மில்லிமீற்றரும் யாழ்ப்பாணத்தின் தோல்புரத்தில் 110 மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளன; மேலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.