வடக்கில் 51 பேருக்கு அரசியல் தலையீடு இன்றி அரச சேவையில் நிரந்தர நியமனம்.

267

வடக்கு மாகாண பொதுச் சேவையில் புதிதாக இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அரசியல் தலையீடு மற்றும் ஊழல் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வில் 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய நியமனங்கள் வழங்கப்படாமல் இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சில நியமனங்களில் வடக்கு மாகாணம் சேர்க்கப்படாததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின், மாகாணத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை குறித்து அறிவித்ததன் பின்னர் விசேட குழுவின் பரிந்துரையின்படி இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நியமனங்கள் எந்தவொரு அரசியல் பரிந்துரைகளும் இன்றி தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பணியாளர் தேவைகள் அதிகமாக இருப்பதால், புதிய நியமனத்தார் எந்தப் பகுதியிலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பொறுப்புணர்வுடன் மற்றும் ஒழுக்கத்துடன் கடமையாற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், இந்த நியமனங்கள் மாகாண சேவையை வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.