ரூ.6.4 மில்லியன் இலஞ்சம்: காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி கைது.!!

122

தனியார் காப்புறுதி நிறுவனமொன்றின் மோட்டார் தொழில்நுட்பப் பொது முகாமையாளர் ஒருவர், இலஞ்சம் வழங்கியதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததுமெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (24) அந்த நிறுவன அலுவலகத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேகநபரை கைது செய்தனர்.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவரை 09.12.2025 அன்று கைது செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த வழக்கு அமைகிறது. குறித்த நபர் மூலம் சட்டவிரோதமாக அறிக்கைகள் பெற்றுக்கொள்வதற்காக 6,415,050 ரூபா இலஞ்சம் வழங்கியதுடன், காப்புறுதி நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டித் தரும் நோக்கில் ஊழல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் நபர்கள் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.