ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்திற்கு புதிய நிபந்தனை: அணுமின் திட்டம் நிராகரித்த இலங்கை!

71

இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா முன்வைத்த அணுமின் நிலையத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், எண்ணெய் வழங்குவதற்கான நீண்டகால ஒப்பந்தத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெற இலங்கை நிரந்தர ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளதால், நீண்டகால ஒப்பந்தம் இலங்கைக்கு சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த நிபந்தனைகளை இலங்கை ஏற்குமா என்பது எதிர்காலத்தில் முக்கிய தீர்மானமாக இருக்கும் நிலையில், சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அணுசக்தி மேம்பாட்டிற்காக ஐந்து சாத்தியமான தளங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், ரஷ்யாவின் அணுமின் திட்டத்தை நிராகரித்திருப்பது நாட்டின் எரிசக்தி கொள்கையில் மாற்றங்களை உருவாக்கக்கூடும்.