ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

48

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் கப்பல்கள் வருவதில் தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு நாட்டின் பிரதான இரண்டு முனையங்களிலும் நிலவும் நெரிசலே காரணம் என அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதுடன், எரிபொருள் சரக்குகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் எரிபொருள் இறக்கும் திறன் கொண்ட இரண்டு முக்கிய இடங்கள் மட்டுமே இருப்பதால், தளவாட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் விநியோக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்காக கூடுதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.