ரயில் மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.!

116

பொலன்னறுவை–மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்துக்குள் அலைந்து திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வெலிகந்த சேவாபிட்டிய பகுதிக்கு அருகில் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த வனவிலங்கு அதிகாரி சி.ஏ. வனசிங்க கூறுகையில், காயமடைந்த யானை சுமார் 30 வயதுடைய, சுமார் எட்டு அடி உயரமுடைய ஆண் யானை எனவும், ரயில் மோதலில் அதன் இரண்டு பின்னங்கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

இந்த யானை மிகவும் கவலைக்கிடமான நிலையில் பிரதான வீதிகளிலும் கிராமப்புற வீதிகளிலும் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிரிதலே வனவிலங்கு கால்நடை வைத்தியர் உள்ளிட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர், காயமடைந்த யானையின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்து வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானையின் நிலைமை கவலைக்கிடமானதால், அதன் சிகிச்சை மற்றும் மீட்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மேலும் கவனம் செலுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.