யாழ். மாநகரசபை முன்பாக வியாபாரிகள் அதிரடிப் போராட்டம்!

107

யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்ஷாந்த் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டு வந்த பிரேரணையை எதிர்த்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று(13.02.2026) மாநகரம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒவ்வொரு மாதமும் வித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயனினைவற்றவர் தான் தர்ஷாந்த் என்றும் நீதிமன்றின் உத்தரவிற்கமைய வழங்கப்பட்ட கடைகளை அகற்ற முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வியாபாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நாம் வாழ்வாதாரதை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மானகரின் உறுப்பினர் தர்ஷாந்த் உணரவில்லை.

அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது. அவரது இந்த பிரேரணையால் அவர் தனக்கு ஊடக விளம்பரத்தை தேடலாம். ஆனால் எமது வாழ்வியலை இழகச் செய்துதான் தனது விளம்பரத்தை தேடக்கூடாது.

இவ்வாறான உறுப்பினரை தேர்ந்தெடுத்தது அந்தப் பகுதி மக்களின் தவறாகவே நினைக்கின்றோம். எனவே, எமக்கு உரிய தீர்வு தராது எமது கடைகளை அகற்றினால் நாம் குடும்பங்களுடன் மாநகரை முற்றுகையிட்டு போராடுவோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பின்னர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாநகரசபை சட்ட வரையறையில் பிரேரணைகளை சபையில் ஏற்றுக்கொள்வது மற்றும் அனுமதிப்பதற்கான வரையறை இருக்கின்றது.

சபையின் சட்ட வரையறை மற்றும் பிரேரணைகளின் அனுமதித்தல் போன்றவற்றில் சபைக்கு வருமான இழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற ஏது நிலைகள் இருக்குமாயின் அதை நிராகரிக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளாதிருக்கும் அதிகாரம் முதல்வருக்கு இருக்கின்றது.

அந்த வகையில் சட்ட ரீதியாக வழங்கப்பட்டு வரி வசூலிக்கப்படும் கடைத்தொகுதி விவகாரத்தில் உறுப்பினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் ஏது நிலைகள் குறித்து ஆராயாது அதை முதல்வர் ஏற்றிருப்பது மாநகரின் சட்ட விதிமுறை மற்றும் இருப்பை சவாலுக்குட்படுத்துகின்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் சட்ட ரீதியாக வாழ்வாதார ரீதியில் கொடுக்கப்பட்ட இந்த கடைகளை உரிய பொறிமுறையின்றி அகற்றுவதற்காக முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது முதல்வரது செயற்பாடுகளிலும் அவ நம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

எனவே மக்களின் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாகவே செயற்படும். குறித்த பிரேரணையை எமது கட்சி எதிர்த்து மக்களின் நலனை உறுதிசெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.