யாழ் மாணவனின் புதுமை: எரிபொருள் வரிசையை கட்டுப்படுத்த புதிய மொபைல் செயலி!

157

யாழ்–கிளிநொச்சி எரிபொருள் வரிசை பிரச்சினைக்கு தீர்வு: மாணவன் உருவாக்கிய புதிய செயலி!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட புதிய மொபைல் செயலி குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுக்கு விசேட விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (06.03.2026) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவிய எரிபொருள் விநியோக சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ. செந்தில்மாறனிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். அந்தக் கோரிக்கைக்கு இணங்க, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் ரமேஷ்நாதன் கருவூலன் இந்த மொபைல் செயலியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.

இன்றைய கலந்துரையாடலின்போது, குறித்த மாணவன் செயலியின் தொழிற்பாடு, பயன்பாடு மற்றும் அதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்த முடியும் என்பதைக் குறித்து ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விரிவான முன்னிலைப்படுத்தலை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த செயலியை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் சில பிரதேசங்களில் மட்டும் எரிபொருள் வரிசை நிலைமை ஏற்பட்டால், அந்தச் சூழ்நிலைகளைச் சீராகக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் எவ்வித சிரமங்களுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் செயலி உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிகக் குறுகிய காலத்துக்குள் இத்தகைய தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கிய மாணவனின் ஆக்கபூர்வ முயற்சிக்கும், அதனை ஊக்குவித்த கல்லூரி அதிபருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தனது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், இந்தச் செயலியின் பயன்பாடு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வ கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வட மண்டல முகாமையாளர் மற்றும் செயலியை உருவாக்கிய மாணவன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.