“யாழ் ஜனாதிபதியின் முழு நாடும் ஒன்றாக” நிகழ்வுக்கு 75 பேருந்துகள் – 2.5 மில்லியன் செலவு

105

யாழில் ஜனாதிபதி நிகழ்வுக்கு மக்கள் கூட்டம்: 25 இலட்சம் கடந்த பேருந்துச் செலவு!

அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட யாழ்ப்பாண நிகழ்வுகளுக்காக பொதுமக்களை அழைத்து வர 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற “இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்ட உதவி வழங்கும் நிகழ்வில்” கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பை உறுதி செய்ய 11 தனியார் பேருந்துகள் சேவைக்கு அமர்த்தப்பட்டதாகவும், அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநாளில் நடைபெற்ற “முழு நாடும் ஒன்றாக” போதை ஒழிப்பு நிகழ்வுக்காக, கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்துக்கு மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இரண்டு நிகழ்வுகளுக்காக மட்டுமே மொத்தம் 25,66,885 ரூபாய் பேருந்துச் செலவாக மாவட்ட செயலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளமை வெளியாகியுள்ளது.

இந்தச் செலவீனம் தொடர்பாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பொதுமக்கள் பங்கேற்பு அரசாங்க நிகழ்வுகளில் இவ்வாறு அரச நிதியில் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் உருவாகி வருகின்றன.